சாய் சங்கரா அறக்கட்டளையின் வெள்ள நிவாரணப் பணி
சென்ற மாதம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மிகவும் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி. நான் முதலாவதாகப் பத்து வருடங்கள் பணிபுரிந்த ஸ்பிக் தொழிற்சாலை அருகிலுள்ள முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்று அறிந்தேன். நானும் என் மனைவியும் இணைந்து நடத்தும் ஸ்ரீ சாயி சங்கரா அறக்கட்டளையின் மூலம் எங்களால் முடிந்த அளவு உதவிசெய்ய எண்ணி, ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் முத்தையாபுரம் அம்மன் கோவிலில் தர்மகர்தாவாக இருப்பவரும் ஆன அழகுராஜ் என்ற பொதுநல ஆர்வலரின் உதவியுடன் , அப்பகுதியில் வசிக்கும் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். அந்நிகழ்ச்சி பற்றி ஒரு பாடலை இயற்றி பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்
ரமேஷ்
இடைவிடா மல்பெய்த அடைமழை யால்மக்கள்
படாத பாடுற்று படுகின்ற துயரத்தை
எங்களால் இயன்றைவரை போக்கிடும் பணியிலே
சங்கரா சாயி அமைப்பு
இல்லங்களில் எல்லாம் மழைநீர் புகுந்தமையால்
இன்னல்கட் குள்ளான மக்கள் - அன்னார்க்கு
பொன்வைக்கும் இடத்திலே பூவைப்ப தைப்போல
சின்னதோர் உதவி செய்தோம்.
உடுக்க மாற்றுடைகள் ஓர்சிறிது பருப்பரிசி
படுக்கப் பாய்போர்வை தலையணைகள் - கூடவே
துடைக்கத் துணித்துண்டும் சேர்த்தவோர் சிறுமூட்டை
கிடைக்கப் பெற்றார் பலருமே
முத்துநகர் அருகிலே முத்தையா புறத்திலே
இத்தகைய நிகழ்வு ஒன்றை - மெத்தவும்
அழகாக அருமையாய் குறையின்றி முறைசெய்த
அழகுராஜ் அவர்க்கு நன்றி!