உதிக்கின்ற கதிரவனா ? சாய்கின்ற சூரியனா?
முகநூலில் நான் இப்படத்தைப் பார்த்தும் எழுந்த கேள்வி, "இந்தப் படத்தில் இருப்பது "உதிக்கின்ற கதிரவனா , அல்லது சாய்கின்ற சூரியனா?" என்பதுதான்.
பலரிடம் காட்டிக் கேட்டபோது சிலர் அதிகாலையில் எடுத்தது என்றும் சிலர் மாலையில் சாயும் நேரத்தில் எடுத்தது என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
பார்ப்பவரின் எண்ணப்படி எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்!
இதுபோலவே பல சமயங்களில் ஒரே நிகழ்வை கண்ட அல்லது அதைப் பற்றிக் கேட்டவர்களும் நம்முடைய கருத்திலிருந்து மாறுபட்ட முடிவுக்கு வரலாம்!
அப்போது சற்று நிதானித்து மற்றவரின் கருத்துக்கும் சற்று இடம் கொடுக்கலாமே?
அன்புடன்
ரமேஷ்
( இது உதயசூரியனா அல்லது மறையும் சூரியனா என்ற கேள்வியின் விடை கிடைக்க பின் குறிப்பைப் பார்க்கவும்! - முதலில் கவிதையைப் படித்து அதன் பின்னே! )
காலையிலே மேலெழும்பும் கதிரவனோ இல்லையிவன்
மாலையிலே மேற்றிசையில் மறைகின்ற சூரியனோ?
அழகுமிகு காட்சியிதைக் கண்டு களிப்பவரில்
எழுகின்ற இரவியிவனே என்று ரசிப்பர்சிலர்!
விழுகின்ற வெய்யோனே என்றே வியப்பர்சிலர்!
பழுதில்லை இருசாரார் பார்வையிலும் புரிதலிலும்.
அரையளவே நிரம்பியதோர் கோப்பையினைக் காண்போரில்
குறையரையாக் காண்பர்சிலர் நிறையரையே என்பர்சிலர்.
கண்காணும் காட்சிகளே ஒன்றெனினும் அவையெழுப்பும்
எண்ணங்கள் மாறுபடும் வெவ்வேறு பேர்மனதில்.
தன்பார்வை தான்மட்டும் உண்மையென எண்ணாமல்
பின்னொருவர் பார்வையையும் மனந்திறந்து மதித்திடுவோம்.
பின் குறிப்பு:
இது நான் முகநூலில் பார்த்த படம். படத்தில் இது சூரிய உதயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது! அழகான இந்தக் காட்சியை படம் பிடித்துப் பதித்த நண்பருக்கு நன்றி!