Search This Blog

Feb 14, 2021

வேலன்டைன் தினம்

வேலன்டைன் தினம்  

"இதழா, இலையா?" என்ற என்னுடைய பதிவிற்கு வந்த சில கருத்துக்கள் " என்ன, ரமேஷுக்கு இளமை திரும்பிகிறதா?" என்ற  ரீதியில் இருந்தன! உதாரணம் - சுந்தர், வரதராஜன் ஆகியோருடைய கருத்துக்கள்!

Initial reaction was - Ramesh is becoming Romantic! - Sundar

Your imagination has brought out your your sensuous side! - B.Varadarajan

என்னுடைய பதில் - 

With Valentine's day approaching, can Romance be far behind?

வயதானவர்கள் காதலைப் பற்றி முன்பு எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை மீள்பதிவாக பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்

ரமேஷ் 

வயதானவர்களுக்கும் வேலன்டைன் 
(அல்லது)  
தயங்காமல் காதல் செய்வீர்.
  


 


வேலன்டைன் கொண்டாட்  டங்கள்   
வாலிபர் களுக்குத்  தானா?
வயதானோர்க்  கில்லை யென்ற 
நியதிகள் எதுவும உண்டோ??

காதலை முதலில் செய்து 
சாதிகள் சேரா ததனால் 
பாதியில் அதனை விட்டு 
மீதிக்கு மாறு வோரும்  

டைம்பாஸ் மட்டும் செய்ய  
கேர்ள்பிரெண்  டோடு  தினமும் 
கடற்கரை மணலில் அமர்ந்து  
கடலையைப்  போடு வோரும்  

ஆசையாய்  சிலநாள் மட்டும் 
அன்பைப்  பரிமாறிப் பின்னால் 
பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் மாற்றி 
சிங்கிள்எனச் சொல்லும் சிலரும் 

ஒருவருக்  கொருவர்  இன்று 

வேலன்டைன் கொடுக்கும் போது 

திருமணம் முதலில்  செய்தும்  

காதலைப் பின்பே  செய்தும்  

கருத்துக்கள் முழுதும்  ஒத்துப் 

போகவே இல்லை  எனினும்  
புரிதலுடன் ஒருவர்க்கொருவர்  
விட்டுக் கொடுத்து வாழும் 

நரைமயிர் தம்பதிகளுமே  

வெட்கத்தை விட்டு இன்று 
வருடத்திற் கொருநா ளேனும் 
வேலன்டைன் அளித்துக்  கொள்வீர்*.

வேலன்டைன் கொண்டாட் டங்கள்   
வாலிபர்க்கு மட்டும் இல்லை 
வயதாகிப் போனால்  என்ன? 
தயங்காமல் காதல் செய்வீர்.

 





Feb 12, 2021

இதழும் இலையும்

என் கல்லூரி நண்பர் கோவிந்தராஜன் "whatsapp " ல் அனுப்பிய இந்தப் படத்தின் 

உந்துதலால் உதித்த ஒரு கவிதை!

அன்புடன் 

ரமேஷ் 


இதழும் இலையும்




செந்தூரச் சிவப்பினையே குழைத்திட்ட அழகிதழோ?
கண்டோர்கள் களிகொள்ளும் வண்டூரும் மலர்முகத்தாள் 
செங்கனிவாய் இதழ்கள் சிந்துகின்ற புன்னகையோ?
இங்கிதுபோல் இதழழகை இதுவரையில் கண்டதில்லை!
இதழழகே இதுவென்றால் மொத்த முகஅழகு 
இதுபோல இருமடங்கு இருக்குமென்ற கற்பனையில் 
அலைபாயும் மனத்தினையே அடக்கிவிடு நண்பா நீ!
இலையொன்று கீழே விழுந்து கிடப்பதையே 
மது வழியும் உதடென்று மயங்கியே  நிற்காதே!
எதையுமோர் முறைமட்டும் நோக்காமல் இருமுறையாய் 
கண்காணும் காட்சியினை மனம்பதிக்கும் முன்னாலே 
என்னஅது எனப்பகுத்து அறிதலே முறையாகும்!!  

Feb 4, 2021

பிறவிப் பயன்

 "பிறவிப் பயன்"

சென்ற வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று 1970 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற என்னுடைய பொறியியல் கல்லூரி கல்லூரிக்  குழு நண்பர்கள் அனைவரும் கோவையில் சந்தித்துப்  பொன்விழா கொண்டாடினோம். 

அந்த சமயத்தில், அந்த வருடம் தேர்வு பெற்ற  எல்லா நண்பர்களைப்  பற்றிய விவரங்களையும்  சேகரித்து, அதனோடு  அவர்கள் குடும்பப் புகைப்படத்தையும் இணைத்து   எங்கள்  கல்லூரித் தோழன் எக்ஸ். துரைராஜால் ஒரு  நினைவுப் புத்தகம் , "பிறவிப் பயன்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 

அந்த பொன்விழா நிகழ்வு நடைபெற்று இன்னும் சில நாட்களில்  ஒரு ஆண்டு நிறைவடையப்  போகிறது.

அதை நினைவு கூறும்  வகையில் , பிறவிப்  பயன் என்ற தலைப்பில் ஒரு வெண்பா பாடல் தொகுப்பை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 



பிறவிப்  பயன்

வீடு மனைவாங்கி வங்கிப் பணம்சேர்த்தால்
தேடும் மனஅமைதி கூடுமோ?- வாடும்
நலிந்தோர்க்கு நாம்செயும் நல்லுதவி மூலம்
பலிக்கும் பிறவிப் பயன் .

(இருவிகற்ப நேரிசை வெண்பா )


இவ்வுலக வாழ்வினை  நாம்விடுக்கு முன்னமே   
செவ்விய நற்செயல் செய்வதால்  - இவ்வுலகோர் 
நல்லான்  இவனென்று சொல்லியே  உள்ளிடின்*          
பல்கும்   பிறவிப் பயன்.

உள்ளுதல் = நினைத்தல்,எண்ணியிரங்கல்
(இருவிகற்ப நேரிசை வெண்பா )



உறவை  ஒதுக்கி   தொடர்புகள்   நீக்கி 
துறவறம் பூணுதல் வேண்டாம் - அறவழிப் 
பாதையை  மீறாமல்  நேரே  நடந்தால் 
அடைவோம் பிறவிப் பயன் 
(பல விகற்ப இன்னிசை வெண்பா)


இனிதான தாயினும் மானிடச் சன்மம்    
இனிமீண்டும் ஏனோ உனக்கு - மனிதா 
கனியிருப்பக்  காயேன்?  பிறத்தலை மீண்டும்**      
துணித்தலே *   பிறவிப் பயன்.

துணித்தால் = துண்டித்தால் 
** மீண்டும் பிறத்தலை என்று பொருள் கொள்ளவும்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா )