Search This Blog

Sep 3, 2016

கவிஞனும் ஒரு தாயே


கவிஞனும் ஒரு தாயே




ஒரு கவிதை பிறக்கும்போது ஒரு கவிஞன் அடையும்  மகிழ்ச்சி ஒரு தாய் குழந்தையைப் பெற்றவுடன் அடையும் மகிழ்ச்சிக்கு ஒப்பு. அந்த வகையில் கவிஞனும் ஒரு தாய்க்கு நிகர்தான்.
கவிஞன் ஒரு  தாயானால், அந்த கவிதைக்கு தந்தை யார்?
வேறு யார் ?  தமிழ்தான்!
இப்படி உருவகித்து ஒரு கவிதை.!
அன்புடன்
ரமேஷ்


தமிழுக்குத் தலையை நீட்டி தாலியை வாங்கிக் கொண்டு
அமிழ்தினும் இனிதாம் சுவையைத் தினம்தினம் சுவைக்கும் கலைஞன்
பழந்தமிழ் இலக்கி யங்கள் பலபடித் துணரும் சுகமும்
புழங்கிடும் புதிய கவிதை படித்ததைப் புணரும் சுகமும்
நிதமந்த " இல்லற " சுகத்தை நன்கனுப விப்பான்  எனினும்
பதமாயொரு சொந்தக் கவிதை கருவிலுரு வாகும் வரையில்
மணமுடித்த பின்னும் தானோர் மகவுபெறா தாயை ஓப்பான்.
தனதான சொந்தக் கவிதை தோன்றவே தவமி ருப்பான்,


மண்துகள் சிப்பிக் குள்ளே  முத்தொன்றின்  கருவா வதுபோல்
மனதுக்குள் புகுந்த கருத்தே கவிதையின் கருவாய் ஆகும்.
பெண்கரு வுற்றே மகவைச் சுமந்ததன்  பின்னர் உடனே 
தானொரு தாயே யென்னும் தகுதியை அடைதல் போல
கவிதையின் கருவைச் சுமந்து  பாடலொன்  றுருவாகும் வரையில்
அவதியில் உழலும்  கவிஞன்  சூலுற்ற தாய்க்கு ஒப்பே!
கருவது உருப்பெறும் வரையில் தாய்படும்  பாடுகள் எல்லாம்
கவிதையுரு வாகும் வரையில் தான்படும் கவிஞனும் தாயே!



 

No comments:

Post a Comment