Search This Blog

Feb 3, 2016

எச்சில்

நாடெங்கும் "தூய பாரதம் " (ஸ்வட்ச் பாரத் ) பற்றி பெரிதாகப் பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் "எச்சில்" பற்றிய ஒரு கவிதை- .ஒரு புதிய கோணத்தில்!

" எச்சிலா" என்று  முகம் சுளிக்கிறீர்களா? "உமிழ் நீர் " என்றால் பரவாயில்லையா? இரண்டும் ஒன்றுதானே!
(ஆங்கிலத்திலும் இது போலத்தான்! saliva வும் spittle ம் !)

"எச்சில் " க்கு பதிலாக "உமிழ் நீர் "என்று போட்டுப் படித்தாலும் சரிதான்.
ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
ரமேஷ் 

வண்டின் எச்சில்  தேனாகும் - நல்
நத்தையின் எச்சில்  முத்தாகும்
வெண்பாற் கடலைக் கடைகையிலே
விளைந்த எச்சில் அமுதாகும்!


சிலந்தியின் வாயில் வடிகின்ற
எச்சில் விரிக்கும்  வலையாகும்.
நீள்சிறைப் பறவையின்* எச்சிலுமே  * swift /swallow
கூட்டைக் கட்டும் சாந்தாகும்.


கன்றினை நக்கிடும் தாய்ப்பசுவின்
உமிழ்நீர் எச்சில் பன்னீரே!
நலிந்தோர் துயரால்  கலங்குகின்ற
கண்களின் எச்சில் கண்ணீரே!


மேகத்தின் எச்சில் மழையாகும் - விஷ
நாகத்தின் எச்சிலும் மருந்தாகும்.
தேகங்கள் புணர்ந்து உணர்கின்ற சுக
போகத்தின் எச்சில் அன்றோ நாம்!. 


வண்ணங்கள் குழைத்துத் தூரிகையால்
துப்பும் எச்சில் ஓவியமே!
எண்ணங்கள்  இணைத்து  எழுத்தாக
உமிழும் எச்சில் காவியமே!



பி.கு :
"வண்டின் எச்சில் " என்ற பிரயோகத்தை  , சமீபத்தில் படித்த சித்தர் சிவ வாக்கியரின் பாடல் ஒன்றில்  கண்டேன்.  அதன் உடனடி உந்துதலே  ( சித்தம் தெளிவிக்கும் சிவவாக்கியர் பாடல்கள்- செய்யுள் எண் 34 ). இந்தக் கவிதை.
இதை எழுதி முடித்து பதிப்பிப்பதற்காக draft ஆக வைத்துவிட்டு, மீண்டும் மேற்கூறிய செய்யுள் தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.
எச்சில் பற்றிய , ஒரு தத்துவார்த்தமான கோணத்துடன் கூறப்பட்ட ,இன்னும் இரண்டு செய்யுள்கள் - (41 மற்றும்  42 ) படித்து வியந்தேன். பின் ஒரு நாள் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

 .

5 comments:

  1. எச்சிலை பற்றி சில எச்சர்ரிக்கைகள் -பகிர்ந்து கொள்கிறேன் நாளை !

    ReplyDelete
  2. துப்பி விடுங்கள் சீக்கிரமாக !

    ReplyDelete
  3. துப்பறிந்து கூருகிறேன் !!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. துப்புதல் பற்றிய பாட்டில்
      தப்பெதுவும் உண்டா என்று
      துப்பறிந்து சொல்லப் போகும்
      திப்ரமா தேவி வெங்கட!

      இப்படிப பட்ட பாட்டு
      எதற்காக எழுதுகின்றீர்?
      துப்புக் கேட்ட வேலை
      என்றெனைத் திட்டுவீரோ?

      அப்பப்பா, அபாராம் இதுபோல்
      எப்படி எழிதினீர் என்று
      அப்பளாஸ் அளித்து என்னை
      அன்புடன் பா ராட்டுவீரா?

      இது பற்றி அறிந்து கொள்ள
      ஆவலும் அதிகம் உண்டு!
      எதெப்படி எனினும் உடனே
      பதமாகப் பகிர்ந்து கொள்க!





      Delete