Search This Blog

Oct 1, 2025

கலைமகளைத் தொழுதிடுவோம்

கலைமகளைத் தொழுதிடுவோம்


நவராத்திரியின் கடைசி நாளான நவமித் திதி , நாம் கலைமகளைப் பூசிக்கும் தினம். 

மனத்தின்,  ஆன்மாவின் தூய்மையைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சிதரும் அன்னை தன்  கரங்களில் ஏந்தியிருக்கும் வீணையும் , புத்தகமும்  குறிப்பது கலைகளின் இணைப்பை.

கல்விக்குத்  தெய்வமாக நாம் மட்டும் சரஸ்வதியை வழிபடுவதில்லை.  பல மதத்தினரும், பண்பாட்டினரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உருவங்களில் கல்வித் தேவதைகளை வணங்கி வந்திருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் இந்த பண்பாடுகள்  அழிந்து போன போது, அவைகளுடன்  இந்த  வழிபாட்டு முறைகளும்  சிதைந்து போயின. ஆனால் நம் பாரதப் பண்பாடும், அப்பண்பாட்டின் சின்னங்களான வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன.

இன்று நாம் கலைமகளைப்  பூசிக்கும் இத்தினத்தில், கலைமகளைப்  பற்றியும் ,  வேறு பண்பாடுகளில் - மதங்களில்-  குறிப்பிடப்பட்டு  வணங்கப்பட்ட கல்வித் தெய்வங்களைப்  பற்றியும் ஒரு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில் !

அனைத்துக் கல்வித் தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுதலுடன் 

உங்கள் அன்பின் 

ரமேஷ்  





வெண்பட்டு ஆடை உடுத்தாளின், தன்கரத்தில் 

பண்ணெழுப்பும் வீணை எடுத்தாளின்- தண்கருணைக்* 

கண்பார்வை பட்டாலே நற்கல்விக் கண்திறக்கும் 

மண்வாழும் மாந்தர்க்கெல் லாம்  


மற்ற மதங்களிலும் பண்பாட்டுச்  சாரலிலும்  

ஓத்தபிற தெய்வங்கள் உண்டாமே - பட்டியல் 

இட்டவற்றைப் பார்ப்போம் சரஸ்வதியை நாம்வணங்கும் 

சத்தான நன்னாளில்  இன்று   




அப்பாலோ ஆணென்றும்#  அத்தீனா பெண்ணென்றும்# 

செப்பித்  தொழுதார்  கிரேக்கர்-  அதன்முன்னர் 

மெர்க்குரி ஆணென்றும்  பெண்மினர் வாவென்றும்   

ரோமர்கள் பேரிட்ட  னர் 





BENZEITEN

ஷிண்டோ மதத்தினரின் ஆண்கடவுள் தென்ஜின்னே !  

பெண்கடவுள் பென்சய்ட்டென் வாக்தேவி**  யின்னுருவாம்  !

ஈகிப்து நாட்டினரின் ஆண்பெண்பால்  தெய்வங்கள் 

தோத்துடன் சேஷத்தும் தான்!  


  

வேற்றுப்பண் பாட்டினர்கள் தம்கல்வித் தேவதையை   

போற்றி வணங்குவதை  விட்டே மறந்தாலும்    

இந்தியப்பண் பாட்டாரோ  நெஞ்சில் நிலைநிறுத்தி 

வந்தனை செய்கின்றார்  நன்று   


* தண் கருணைக்  கண்  = குளிர்ந்த,  கருணைகாட்டும் விழி 

** வாக்தேவி = சொல்லின் அரசி. . 

பென்சய்ட்டன்  என்னும் பெண் தெய்வம், சரஸ்வதியைப் போன்றே கையில் ஓர் இசைக்கருவியை ஏந்தியிருப்பதைக் காணலாம் 

# மற்ற பண்பாடுகளில் கல்வித் தெய்வங்களாக, பெண் தெய்வத்தோடு ,ஒரு ஆன் தெய்வமும் குறிப்படப்பட்டுள்ளதைப்  பார்க்கலாம். நம் பண்பாட்டிலும், விநாயகரை ஆண்  கல்வித் தெய்வமாக வழிபடுதல் உண்டு.