Search This Blog

Aug 15, 2025

சுதந்திர தின வாழ்த்துகள்

 சுதந்திர தின வாழ்த்துகள் 




மதமினம் பற்பல   மொழிகள் என்றும் 

----வடகுட குணதென்* திசைகள் என்றும்

விதவித வெவ்வெவ் வேறு பிரிவுகள் 

----பலவு மிருந்தும்  அனைவரும் ஒன்றாய் 

இதந்தரும் இனியவிச் சுதந்திர நாளில் 

----இணைந்து  பாரதத் தாயினைப் போற்றி 

சதம்பல யுகம்** இனும் சிதறுதல் இன்றி 

----சிறப்புடன் இருந்திட வாழ்த்துகள் சொல்வோம் .


எல்லைக்  கோட்டின் இருபுறங் களிலும்   

----தொல்லை யளிக்கும் தெருநறை ^ அழிக்கும்  

      ----வல்லமை பெற்றவள் விளங்கிட வாழ்த்து! 

வரம்புகள் மீறி வம்புகள் செய்யும்   

---- டிரம்பின் காப்பு வரிகளை*** எதிர்த்து 

      ---- திறம்பட மாற்றுகள் கண்டிட வாழ்த்து 

நித்தம் நித்தம் புத்தம் புதிதாய் 

---- பற்பல தொழில்வகை  வித்துகள் விதைத்து 

    ---- இந்திய இளைஞர் எழுந்திட வாழ்த்து 

சிறுதொழில் செய்வோர் சிறந்திட வாழ்த்து 

-----பெருந்தொழில் செய்வோர் பெருகிட வாழ்த்து 

     ----உழவுத் தொழிலோர் உயர்ந்திட  வாழ்த்து

மொத்த உள்நாட்டு ஆக்கத்  திறனை# 

----மெத்த உயர்த்தி மூன்றாண்டுகளில் 

    ----மூன்றாம் இடத்தைப் பிடித்திட வாழ்த்து 


அன்புடன் 

ரமேஷ் 


^ தெருநர் = பகைவர் 

* வடகுட குணதென் = North India, Western India, Eastern India and South India divisions

**  சதம் பல யுகம் = பல சத  யுகங்கள் என்று படித்தறிக 

*** காப்பு வரிகள் = tariffs

# உள்நாட்டு ஆக்கத்  திறன் =  GDP




Aug 10, 2025

உரசல்

உரசல்கள் பலவிதம்!
சில உரசல்கள் மென்மையானவை. 
வேறு சில வன்மையானவை.
வெவ்வேறு விதமான உரசல்கள் விளைக்கும் விளைவுகள் பற்றி ஒரு கற்பனை!
அன்புடன் 
ரமேஷ் 

உரசல் 

8




மலையோடு  முகிலுரச மழை பிறக்கும்
மலரோடு காற்றுரசி  மணம் பரப்பும்.
கல்லோடு உளியுரச சிலை பிறக்கும்
சொல்லோடு கருத்துரச கவி பிறக்கும்

மண்ணோடு நீருரச பயிர் தழைக்கும்
வண்டோடு மலருரசி தேன் சுரக்கும்  
கண்ணோடு கண்ணுரச காதல் பிறக்கும் 
பெண்ணோடு ஆணுரசல்  சரசம் ஆகும்  

பஞ்சோடு பொரியுரச தீ பிறக்கும் 
நெஞ்சோடு நினைவுரச துயர் மறக்கும் 
வாளோடு வாளுரச வீரம் பிறக்கும் 
தோளோடு தோளுரச நட்பு தழைக்கும் 

தென்றல்குழ லுரசுகையில் இசை பிறக்கும்
கன்றுதாய் மடியுரச பால் சுரக்கும்
உன்னோடு  உன்னையே உரசிக் கொண்டால்
உண்மையெது என்கின்ற ஞானம் பிறக்கும்.
 

அன்புடன் 

ரமேஷ்