Search This Blog

Oct 2, 2024

நீத்தார் நினைவு

நீத்தார் நினைவு 

இன்று மாளய அமாவாசை.  எல்லா அமாவாசை நாட்களும் நீத்தார் நினைவு நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மாளயம் என்று அழைக்கப்படும்  பதினைந்து நாட்களும் , நம் முன்னோரை நினைத்தும், வழிபட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளோடு முடிவடையும் இந்த மாளயத்தில் ஒரு பாடல் மூலம் நம் முன்னோர்களை வணங்கும் விதமாக ஒரு வெண்பா --இதனுடன் சென்ற ஆண்டுகளில் நான் எழுதிப்  பதித்த இரு சிறு பாடல்களையும் இணைத்து!

அன்புடன் 

ரமேஷ் 


ஈன்றதாய் தந்தையொடு முன்பிருந்த மூத்தாரின் 

மூன்று தலைமுறையைப் பேரிட்டு - நோன்பிருந்து 

எள்நீரை மட்டும் இறைத்துத் துதிக்காமல்   

உள்ளத்தில் ஏற்றிவைப்  போம் !

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)


தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)