மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது
மொழி எவ்வாறு தோன்றியது என்பது பற்றி ஒரு அதீதக் கற்பனை!
அன்புடன்
ரமேஷ்
யுகம் யுகமாக சகம்பல வற்றிலும்
-----தனித்தே தவித்த மவுனப் பறவையின்
அகத்தில் விதையாய் விழுந்து அதன்பின்
-----விருட்சமாய் விரிந்த எண்ணங்கள் எல்லாம்
ஒலி-மொழி வார்த்தைகள் இல்லா ததனால்
-----புகலவும் பகிரவும் இயலுதல் இன்றி
வெளியில் வராமல் புதைந்துள படியால்
-----வலியால் வருந்தி வருடங்கள் சென்றபின்
மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது
கவனம் கவனமாய்க் காத்து வந்தது
முட்டையின் சட்டைகள் உடைந்ததன் வெளியே
குட்டிக் குஞ்சுகள் வந்தன ஒலியாய்!
ஒன்றாய்ச் சேர்ந்த ஒலியின் துகள்கள்
நன்றாய் இணைந்து பிறந்தன சொற்கள்!
சொற்களும் எண்ணமும் இணைந்தே எழுந்தது
நற்றமிழ் மொழியும் கவிதையும் கதையும்!