Search This Blog

May 17, 2024

வலிகளை விலக்கும் வழி?

வலிகளை விலக்கும் வழி?

"வலியுடன் வாழக் கற்றுக்கொள்" என்ற என் பாடலைப் பதிவிட்ட பின் பல நண்பர்கள் , வலி நீக்குவதற்கு பல விதமான  வழிகளை எனக்குச் சொன்னார்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர், மெடிடேஷன் , ரேக்கி  என்று இத்யாதி இத்யாதி அறிவுரைகள்! "எல்லாமே என் வலி தீர வேண்டும்" என்ற நல்லெண்ணத்துடன் கூறப்பட்டாலும், எதை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் என் தலை சுற்றியது! 

இது குறித்து ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 









வலிகளை  எளிதாய் விலக்கிடும்  வழிகளை  

பலரும் உரைப்பார்  பரிந்து - நம்நலனை 

விரும்பி   அவர்தரும் யோசனை எல்லாம்

அரிதாம் செயல்முறை யாக்க !


மேலை நாட்டு மருத்துவங் கள்எதுவும்  

வேலைக்கு ஆகாது என்பார் -காலையும்  

மாலையும் ஆயுர் வேதத்தின் எண்ணெயை 

தோலின்மேல் தேய்த்தூறச் சொல்வார் 


ஹோமியோ பதிதான் ஒரேவழி  இதற்கென்று

சாமிமேல் சத்தியம் செய்வார்- பூமியில்

நிகரிதர்க் கில்லை நிச்சயம் இதுவெனப் 

பகருவார் பலருமிங் குண்டு                                                                   பகருவார்= சொல்லுவார்


வயதான பின்னே வலிகள் வருவது 

இயற்கையே பொறுத்திடெனக்  கூறித் - தயங்காமல் 

நானெழுதிய பாட்டை# எனக்கே மேற்காட்டி 

தேனொழுக ஆறுதல் சொல்வார்


*நுண்துளைக் குத்தூசி **தொடுகைப் பரிகாரம் 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை - வேறு 

எண்ண அலைநிறுத்தி ^^ ஆழ்நிலைத் தியானம்

என்றுபல பரிகாரம் உரைப்பார்                                                       


வலிநீக்க  பற்பல  மருத்துவ வகைகளை 

பலருமே பரிந்தெனக் குரைக்க  - எந்த

வகையைநான்  பின்பற்று வேனென்று எண்ணியே  

திகைத்தே தலைசுற்றி நின் றேன். 


# - வலியுடன் வாழப் பழகிவிடு  என்ற எனது கவிதை. இதை 

https://kanithottam.blogspot.com/2024/05/blog-post.html என்ற இணைப்பில் காணலாம்.

* நுண்துளைக் குத்தூசி = accupuncture 

**தொடுகைப் பரிகாரம் = Reiki 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை = Hypnosis 

^^ ஆழ்நிலைத் தியானம் = meditation 










  

May 13, 2024

வலியுடன் வாழக் கற்றுக்கொள்

  வலியுடன் வாழக் கற்றுக்கொள் 

சென்ற இரு மாதங்களாய் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து தாக்கி வலியால் அவதிப்படும் ஆற்றாமையில் எழுதிய ஒரு பாடல். 

அன்புடன் 

ரமேஷ் 





வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


வயது எழுபதை எட்டிய பின்னர் 

-----வலிபல  வந்து நமை வாட்டும் 

பயணத்தில் இறுதிப் பகுதியில் இருக்கையில் 

-----பலவகை நோய்கள்  நமைச் சேரும் 

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து 

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


உடல்திடம் குறைந்து இடர்படும் நிலையும்

-----நிச்சயம் நேர்ந்திடும் முதியவர்க்கு - பல 

இடங்களில்  உடலினில் கடும்வலி கண்டிடும் 

-----ஆண்டுகள் மிகப்பல ஆனவர்க்கு 

தலைவலி கால்வலி கைவலி மெய்வலி 

-----முதுகு வலியோடு மூட்டுவலி -எனப் 

பலவகை வலிகள் ஒன்றன்பின் ஒன்றாய் 

-----வரவே வரிசையில் காத்திருக்கும்  

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


மருந்து மாத்திரை வேளை  தவறாமல் 

-----தினம்தினம் நாமே விழுங்கிடினும் 

சிறந்த மருத்துவர் சொல்லும் அறிவுரை 

-----கேட்டே நாளும் நடந்தபி(ன்)னும் 

விரும்பி உ(ண்)ணும்பல உணவு வகைகளை 

-----விலக்கி முற்றும் துறந்த பி(ன்)னும் 

துரிதமாய் நம் வலிகளுக்  கேயோர் 

-----தீர்வு என்றும் வருவதில்லை  

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து            

            வலியுடன் வாழக் கற்றுக்கொள்