இன்று முடியுமிந் நற்செயல் ஆண்டில்* * நற்செயல் ஆண்டு = சுபக்கிரிது
நாமே விதைத்த நற்செயல் விதைகள்
நன்றாய் வளர்ந்திம் மங்கள ஆண்டில்* * மங்கல ஆண்டு = சோபகிருது
நலம்பல நல்கிட வாழ்த்துகள் உரைப்பேன்
உக்ரேன் ரஷ்யா இவர்களி னூடே
நடக்கும் நீள்போர் நின்றிட வாழ்த்து- (நம்)
பக்கத்துக்கு நாட்டினர் அக்கிரமச் செயல்கள்
அடங்கியே அமைதி நிலவிட வாழ்த்து
உரு பல மாறிடும் கிருமிக் கூட்டம்
மறுபடி நம்மைத் தாக்கா திருக்கவும்
முகத்தையும் மூக்கையும் மூடித் திரியும்
நிகழ்வு நேராது இருக்கவும் வாழ்த்து
இந்திய நாட்டின் தலைமையில் இங்கு
இருபது நாட்டினர் இணைந் துரையாடி
செந்நெறி முறைகள் சீர்திருத் தங்கள்
சிறப்பாய் செய்து முடித்திட வாழ்த்து
உலகம் எங்கும் பொருளா தார
வளர்ச்சிகள் குன்றி வருந்திடும் போதும்
கலக்கம் இன்றி நம்திரு நாடுதன்
இலக்கை எட்டி அடைந்திட வாழ்த்து.
அரிசி கோதுமை மட்டும் விளைத்து
அறுவடை செய்வதை இனிமேல் விடுத்து
சிறுதா னியங்கள் சோளம் கம்பு
இவற்றையும் விளைத்து சிறப்புற வாழ்த்து
கருநா டகத்தில் கனமழை பொழிந்து
காவிரி கரைபுரண் டோடிட வாழ்த்து
வருடா வருடம் இருநாட் டவர்க்கும் ** **இருநாடு = கர்நாடகம்,தமிழ்நாடு
நடக்கும் நீர்ப்போர் நின்றிட வாழ்த்து
பிரிகேடு ஏரிக் கரைக்குடி யிருப்பில்* * Brigade Lake Front
தெருநாய்த் தொல்லை தொலைந்திட வாழ்த்து
*மெட்ரோ ரயிலின் தடத்தினில் உள்ள
இடைவெளி நீங்கி நிறைவுற வாழ்த்து * The gap between KRpuram and Baipanahalli
நான்
உரைத்திடும் வாழ்த்துகள் பலவெனினும் அதை
நிறைத்தலும் நீக்கலும் அவன் திரு வருளே!
குருபரன் பழனிக் குன்றினில் உறையும்
இறைவனை வணங்கி வேண்டிடு வோமே!