ஒரு ஜனனம் , ஒரு மரணம்
சாதனைகள் படைத்த சாமானி யர்இருவர்
வெற்றிக் கோப்பையுடன் வீடு திரும்புகையில்
இருவரின் கண்களிலும் பெருகிவரும் கண்ணீரே!
காரணமோ வெவ்வேறு! விதியெழுதிய கதையிதுவே!
சின்னப்பன் பட்டியெனும் சிற்றூரிலே பிறந்து
முன்னேறப் போராடி வெற்றிகண்ட நடராசன்
தொண்ணுறு நாட்களுக்கு முன்பிறந்த தன்மகவை
கண்ணார முதல்முறையாய் கண்டு அணைக்கையிலே
கண்ணூறிக் கன்னத்தில் வழிகிறது கண்ணீரே!
ஐதரா பாத்நகரின் ஆட்டோ ஒட்டிமகன்
தாய்நாடு திரும்புகையில் தந்தை உயிரோடில்லை!
விதையிட்டு விளையாட்டு ஆர்வம் வளர்த்தவரை
புதைத்திட்ட இடமடைந்து சதைகுலுங்க அழுகையிலே
கருவிழியில் அருவியெனப் பெருகுவதும் கண்ணீரே!
ஒருவரது கண்ணீரின் பின்னணியில் ஜனனம்!
மற்றவரின் கண்ணீரின் காரணமோ மரணம்!
விதியெழுதிய கதை இதுவே! வேறன்ன கூறுவது?
அன்புடன்
ரமேஷ்