Search This Blog

Mar 29, 2019

தேர்தல்

தேர்தல்

சில தினங்கள் சென்றதும் தேர்தலெனும் உத்சவம்
இந்தியாவின் தலைவிதியே  இந்தநாளில் நிர்ணயம்.

அஞ்சுஅஞ்சு வருஷந்தோறும் அரங்கேறும் விந்தையே
நாட்டுமக்கள் ஓட்டுரிமை விலைபோகும் சந்தையே.

இலவசங்கள் பலவிதம் மக்கள்வசம் இத்தினம்
சேருவதால் ஓட்டுப்போட காட்டமாட்டார் மெத்தனம்!

கோழிக்கறிப் புலவுச்சோறு*ப் பொட்டணங்கள் அத்துடன்    * chicken  biriyani
பிழிந்தெடுத்த பழத்தின்சாறு கால்குடுவை* நிச்சயம்              *quarter

ஓட்டுப்போட மையைத்தடவ கையைக்காட்டும் முன்னமே
காந்திபோட்ட சலவைநோட்டு சிலதும்வந்து சேருமே !

அஞ்சுஅஞ்சு வருஷந்தோறும் அரங்கேறும் விந்தையே
நாட்டுமக்கள் ஓட்டுரிமை விலைபோகும் சந்தையே.

Mar 27, 2019

இப்படித்தான் இருக்கும் இனி.

இப்படித்தான் இருக்கும் இனி.

சமீபத்தில் ஒரு கவியரங்கத்தில் மேற்கண்ட தலைப்பில் பாடல்கள் எழுத அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் நான் பங்கேற்க முடியாவிட்டாலும், அந்தத் தலைப்பில் இரு சிறு பாடல்கள் எழுதி இருக்கிறேன்.
கருத்து கொஞ்சம் pessimistic  ஆக இருந்தாலும் , நிதர்சனம் என்னவோ இதுதான்!

அன்புடன்

ரமேஷ்

தருமம் தலைகுனியும் தீயவை தலைநிமிரும்
----------வருமங்கள் விருட்சமாய் வளரும் 
பருவமழை தப்பும் ஏரிகுளம்  வற்றும்
----------இப்படித்தான் இருக்கும் இனி.

உள்ளங்கள் விலகும் உறவுகளும் கலையும் 
----------கள்ளங்கள் கரைமீறிப் பெருகும் - 
சுள்ளென்று  மொழிமுழுதும் சுடுசொற்கள் நிறையும்
----------இப்படித்தான் இருக்கும் இனி.

Mar 21, 2019

பேத்திகள் -

இன்று எனது மூன்றாவது பேத்தி ஆதிராவின் பிறந்த நாள்!
அதைக்  கொண்டாடும் விதமாக , வெகு நாட்களாக விடுபட்டிருந்த என் பதிவை மீண்டும் புதுப்பிக்கிறேன்!
அன்புடன் 
ரமேஷ் 
கனித்தோட்டம் 


பேத்திகள் 

பேத்திகள் -

ஓடுதலிலும் தேடுதலிலுமே  காலம் கழிந்ததால்
மகனிடமும் மகளிடமும் காட்ட மறந்து
மனதில் அணை கட்டித்
தேக்கி வைத்திருந்தஅன்பு ஊற்றுகளின்
வடிகாலாக விளங்கும்
பாத்திகள்

பேத்திகள்-

வையகத்தின் மொத்த அழகையும்
கையகப்படுத்தி , 
அதனைத் தம்
அழகுமுகச்  சிரிப்பிலும்
உதிர்மழலைச் சொல்லிலும்
சேர்த்து வைத்திருக்கும்
நேர்த்திகள்

தாத்தாக்களுக்கு 
அவை  தரும் ஆனந்தத்தைக்
கூற உண்டோ  
வார்த்தைகள்?