Search This Blog

Aug 4, 2016

எங்கே எனது கவிதை


"எங்கே எனது கவிதை ? கனவில் எழுதி மடித்த கவிதை !
கவிதை தேடித் தாருங்கள், இல்லையேல் 
கனவை மீட்டுத் தாருங்கள் "

மறக்க முடியாத திரைப்படப் பாடல் வரிகள் ! வைரமுத்துவின் வைர வரிகளுக்கு, ரஹ்மானின் இனிய இசை .

கனவுகள், கவிஞர்களுக்கு கவிதை சுரக்கும்  கேணிகள்! இதற்கு நானும் விலக்கல்ல!

விடிந்தும் விடியாத காலைப்  பொழுதில், விழித்தும்  விழிக்காத அரைத் தூக்கத்தில், நினைவின் கதவுகளைத் கனவுகள் தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் , பல கவிதைகள் உதிக்கின்றன. ஆனால் , முழித்தவுடன், நினைவில் நிற்பது சிலவே! பலவற்றை நான் தொலைத்து வருந்தியிருக்கிறேன் !

இதோ, எனது வருத்தம் பற்றி, கலி விருத்தத்தில் , ஒரு சிறு கவிதை!

படித்து மகிழுங்கள்

அன்புடன்

ரமேஷ்

எங்கே எனது கவிதை

காலைத் தூக்கம் கலைகிற நேரம்
கனவாய் வந்தது கவிதை ஒன்று
காற்றில் அதுவும் கரையும் முன்னே
கண்ணைத் திறந்து கணினியை எடுத்தேன்


லாகின்* செய்து கூகிளுள்** நுழையுமுன்
மின்கல  அழுத்தம் முற்றும் போனதால்
கணினியை விடுத்து காகிதம் எடுத்து
எழுத முனைந்தால் பேனா காணோம்!


என்ன செய்வது என்று பதைக்கையில்
சின்னக்  கலக்கல் அடிவயிற் றினிலே.
கவிதையின் கூவலை கொஞ்சம் தள்ளலாம்
இயற்கையின் கூவலை தள்ளல் இயலுமோ?


கடன்களை முடித்து வெளியே வருகையில்
கணினியின் மின்கல அழுத்தம் நிறைந்தது.
படுக்கையின் அடியில் பேனா கிடைத்தது !
கவிதை மட்டும் மறந்து போனது!



 *  Login

** கூகிள் உள்ளீட்டுக்  கருவி 

 

3 comments: