Search This Blog

Dec 13, 2025

இன்னும் கொஞ்சம் ----

இன்னும் கொஞ்சம் ---- 


இன்னும் கொஞ்சம் ----

அன்பை வெளிப்படுத்தவும், கருணையைக் காட்டவும் , உதவி செய்யவும், பிறர் நமக்குச்  செய்த உதவிகளுக்கு  நன்றியைத் தெரிவிக்கவும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டு பின் நினைத்து வருந்துவது என்பது நம்  அனைவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று. நாம் செய்ய நினைத்து , செய்யாமல் தள்ளிப் போட்ட சிலவற்றை செய்யவே முடியாமல் போய்விடுமுன், இன்றே, இப்போதே, செய்துவிடலாமே !

அன்புடன் 

ரமேஷ்  




என்னைப்   பெற்ற தந்தையும்  தாயும்  

முன் அவர் தனியாய் வாழ்ந்த போதிலும் 

பின்னென் னுடனே சேர்ந்த்திருக் கையிலும் 

------------இன்னும் கொஞ்சம் நேசமும் நெருக்கமும் 

------------காட்டி இருக்கலாமோ 

------------என் அன்பை அவர்க்கு நன்றாய்த் தெரியச்    

------------செய்தி ருக்கலாமோ 


இன்வாழ்வுப் பொருள்* எதுவும் வேண்டாம்       * luxury goods 

என்றுரைத்தே அவர் ஏற்க மறுத்தாலும்

என்னால் அந்நாள்  இயன்ற வரையில்      

------------இன்னும் கொஞ்சம் ஏதேனும் நான் 

------------செய்திருக்கலாமோ?

 ------------இன்னும் அவர்க்கு வாழ்க்கை வசதிகள் 

------------சேர்த்திருக்கலாமோ?  


நெருங்கிய நண்பர் அருகில் இருந்தும் 

நேரே  சந்தித் துரையாடாமல் 

இணைய தளத்தில் இணைவதைக் குறைத்து O

------------இன்னும் கொஞ்சம் தடவைகள் நேரில் 

------------பார்த்திருக்கலாமோ ?

------------அவர் கூட நடந்து  நினைவில் நெகிழ்ந்து கை 

------------கோர்த்திருக்கலாமோ? 


என்னிடம் உதவி கேட்டு அணுகிய 

முன்பின் அறியா முகங்களுக்கும்

அன்புடன் இருந்த உறவுகளுக்கும்    

------------இன்னும் கொஞ்சம் கூட உதவிகள் 

------------செய்திருக்கலாமோ? - அவர்

------------முகத்தில் புன்னகை இன்னும் கொஞ்சம் 

------------சேர்த்திருக்கலாமோ?


நானின் றிப்படி நலமாய் இருப்பதற் 

கேணிப் படியாய்  இருந்து உதவிய 

மானுடர் பலராம்; நன்றி அவர்க்காய் 

------------இன்னும் கொஞ்சம் நெஞ்சில்மட்டேனும்  

------------நினைத்திருக்கலாமோ?

------------நேரில் சென்றென்  நன்றிக்  கடனை 

------------*நேர்ந்திருக்கலாமோ?                 


என்னை ஈன்ற தாய்தந்தை யுமே  

இன்னுயிர் நீத்தின்  றிறையடி சேர்ந்தபின் 

இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் 

என்றே நினைந்து  நொந்தால் பயனென்?


இன்னும் கொஞ்சம் செய்தி ருக்கலாம் 

என்றே  தோன்றும் எதையும் கூட 

பையச் செய்வோம் என்றே நினைப்பின் 

ஐயோ அதனைச் செய்யும் காலம் 

கையை விட்டுக் கடந்தே சென்று 

நைதல்*  மட்டும்    நிலைக்கும் !  அதனால்                 * மனம் வருந்துதல் 


"இன்னும் கொஞ்சம்"  என்றே தோன்றும்   

எதையும்    இன்றே செய்தல் நன்றாம் !