Search This Blog

Jul 31, 2022

ஈ.எம்.எஸ் கூடலில் படித்த பாடல் பாடல்

1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் நாள் நானும் என்னுடன் சேர்த்து முப்பத்துயோர் இளைஞர்களும் ஸ்பிக் நிறுவனத்தில்  ஈ.எம்.எஸ் பயிற்சிபெற இணைந்தோம். நேற்று அந்நாளின் 50 ஆம் நிறைவை நண்பர்கள் சிலர் கூடிக் கொண்டாடினோம். அந்த வெள்ளிவிழா கூடலுக்காக நான் இயற்றிப் படித்த பாடல் இது.

அன்புடன்

ரமேஷ்.

பொறியியற் பாடங்கள் படித்துத்  தேர்வுற்று-----பட்டங்கள் பெறுவ தொன்றே

குறியாக பலவாண்டு  குறைவின்றி உழைத்தபின்-

-----பெற்றிட்டபட்டம் கையில் !

பெரிதாக சாதனைகள் புரியவே வேண்டிடும்
----கனவுகள் கோடி மனதில்!
புரியாத புதுஉலகில்  இவ்விரண்டின் துணையோடு
-----உறுதியுடன்  கால் பதித்தோம்!

முத்துநகர்ப் புறத்திலே முத்தைய புரத்திலே
-----முத்தெடுக்கக் கடலில் மூழ்கி  
முப்பத்தி  யோர்மணிகள்  கொத்தாகக் கண்டெடுத்து 
-----ஸ்பிக்நிறு வனத்தில் இணைத்தார்.
முப்பத்தோர் இளைஞர்கள் மேலாண்மை பயிற்சிக்கு
------எழுபத்தி ரண்டில் இணைந்தோம்.
தற்போது பதினேழு நண்பரதில் மட்டுமே 
------இவ்வரங்கில்  கூடுகின் றோம் 

இடைப்பட்ட ஆண்டுகளில் தாய்நிறு வனத்திலே 
-----தடையின்றி இருந்தார் சிலர் 
விடைபெற்று வேறுபல பாதைகள் தேர்ந்தெடுத்து 
-----பயணம் புரிந்தார் பலர்.
நாடென்னும் எல்லைகள் நமக்கில்லை எனச்சொல்லி
-----கடலைக் கடந்தார் சிலர்!
வீடென்றும் உறவென்றும் பலதளைகள் பிணைத்ததால்
-----இங்கே இருந்தார் பலர்!

ஒருபத்து ஆண்டுகளே நம்தாய் நிறுவனத்தில் 
-----பணிசெய்து நான் விலகினேன் - ஆயின் 
பெருமையாய் நானுணர்ந் தென்மனத்தில் பதிந்தவை 
-----யச் சத்தான பத்தாண்டுகள்.
இன்று நினைத்தாலும் இனியபல நினைவுகள் 
-----நெஞ்சிலே  நிழலாடுதே
ஒன்றா இரண்டா இல்லையிவை பலநூறு 
-----எங்கனம் எடுத்துரைப் பேன்?

ஆச்சாரியா பங்ளாவில்   அதன்இணைந்த   கட்டடத்தில்   
-----மில்லர்புற வீட்டறைகளில்    
நேசமிகு  நண்பருடன் வாசம் புரிந்தன்று 
------வாழ்ந்திட்ட கதை சொல்லவா?

நிறுத்தியுள்ள பேருந்து மேலேறி உட்கார்ந்து 
------முன்னிரவுப் பொழுது முழுதும் 
நொருக்குத் தீனியுடன் கல்யாணி துணையோடு 
------மகிழ்ந்திருந்த கதை சொல்லவா?

பிகேகே ராமகிருஷ்ணன் பத்மநா பன்முதலோர்   
-----படிப்பித்த கதை சொல்லவா?
சர்க்காரின் ஆங்கிலப் பிரயோ கங்கள் புரியாமல் 
-----முழித்திட்ட கதை சொல்லவா?

எர்ணா குளத்திலே  விடுதலை விடுதியில் 
-----தங்கி எடுத்த டிரைனிங் 
மதுரா பாரிலும் மேனகா தியேட்டரிலும் 
-----தொடர்ந்த கதை சொல்லவா?

பன்னிரண்டு மாதங்கள் முடிவுற்ற பின்னாலே 
-----வேலையுறு திப்படு கையில் 
தன்னிச்சையாகவே சம்பளம் குறைத்ததால் 
-----வருந்திய கதை சொல்லவா?

நேரத்தை  நோக்காமல் நாட்கிழமை பாராமல்  
-----கருமம்  கண்ணாக  உழைத்து 
உருப்பெற்ற உரச்சாலை கண்டதும் மெய்மறந்து 
------மகிழ்வுற்ற கதை சொல்லவா?

ஓடிப்போய்  மாலை மணிஏழின் முன்னாடி  
-----ஆஃபீசர்கிளப் பஸ்சைப்  பிடித்து 
மேடை வரிப்பந்து பூப்பந்து ஆட்டங்கள் 
-----ஆடிய கதை சொல்லவா? 

திறந்தவெளி திரையரங்கில் கால்நீட்டி படுத்தபடி  
-----படம்பார்த்த கதை சொல்லவா?
கௌரிசங்கர் ஓட்டலில் கட்டிவைத்த பொட்டலத்தை   
-----கோட்டைவிட் டதைச் சொல்லவா? 

காலை எழுந்தவுடன்   ஆலையின் ப்ரில்டவரை 
----- அன்றாடம் தரிசனம் செய்து 
புகையும் டவர் பார்த்தபின்  யாவும்  நலமென்று 
------ உணர்ந்த கதை சொல்லவா?

ஆர்ஜீ பாயிலர் யூரியா ரியேக்டர் 
-----சீஓடூ  கம்ப்ரசர் களில் 
ஆர்வம் குறையாமல் ராப்பகல்கள் பார்க்காமல் 
-----உழைத்த கதை சொல்லவா? 

சுற்றுலா செல்லுகையில் சுராங்கனி பாட்டும் பிற 
-----பைலாக்கள் பாடி மகிழ்ந்து 
குற்றால அருவியில் கும்மாளங்கள் போட்டு 
-----குளித்த கதை சொல்லவா?

ஈஎம்எஸ் சொற்றொடரில் மேலாண்மை என்பதை 
-----மருத்துவம் என மாற்றியே 
நாம்போட்ட நாடகம் இன்றும் நம் நினைவிலே 
-----நிற்கின்ற கதை சொல்லவா?

கார்பமேட் கரைசல் என்கண்ணில் விழுந்ததால் 
-----பார்வை பழுதுற்ற போதில் 
சார்ந்த என்நண்பர்கள் செய்திட்ட உதவியால் 
-----சரியான கதை சொல்வதா?

ராதா ராம்சுப்பு காதல் நிறைவேற்ற 
-----தூதுசென் றதைச் சொல்வதா?
வாதாடிப் பின்னாலே உதைவாங்கும் முன்னாலே 
-----ஓடியதைச் சொல்வதா?

வற்றாத நினைவுகளும் வாடாத நிகழ்வுகளும் 
------சுற்றியெனைச்  சூழ்ந்து வருதே!
பட்டியலில் அடங்காது விட்டகுறை தொட்டகுறை 
-----யாகவே  தொடர் கின்றதே!


முப்பதை நுப்போதென் றெப்போது மேசொல்லும்  
-----குழந்தையை  யொத்த   ஒருவன்   
எப்போதும் கடைசியாய் பேருந்திலே ஓடி 
-----வந்தேறும் வேறு ஒருவன்   
 
உரத்தகுரல் என்றுமே எழுப்பிப் பேசாத  
----- அமைதி  உருவம்  ஒருவன்  
மறக்காமல் இன்னாளில்   அம்மூவர்  நினைவுக்கும்  
------சிறப்புடன் அஞ்சலி செய்வோம்.


எப்பாதை எடுத்தாலும் எவ்வழியில் சென்றாலும்
-----அவ்வழியின்  நெறிமுறை யிலே
தப்பாது ஒருசிறிதும் தவறேதும் புரியாது
-----கடமைகள் ஆற்றி முடித்தோம்!

தகவுள்ள மகன்மகளை பெற்றெடுத்து அவரீன்ற
-----பெயரன் பெயர்த்தி களுடன்
அகங்குளிர  மிகநேரம் மீண்டும்சிறு பிள்ளைபோல்
-----ஆடியே மகிழுகின் றோம்!

ஆண்டுகள் ஐம்பது ஓடியே முடிந்துநாம்
-----கூடுமின் நன்னா ளினில்
மீண்டும்நம் காளைப் பருவ நிகழ்வுகளை
-----பகிர்ந்து பேசி நெகிழ்வோம்!

இப்போது இன்னேரம்  நிறைந்தநல்  மனதோடு
-----நண்பரொடு  கூடுகின் றோம் !
எப்போதும் இந்நினைவு நமைவிட்டு  அகலாமல்
-----மனக்கூட்டில் பூட்டி வைப்போம்!